Tuesday 31 October 2017

புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழும் தமிழ்

  கனடாவிற்கும் கவின்மிகு தமிழுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இங்கே தமிழன்னை கழிபேருவகையுடன் களிநடம் புரிகின்றாள். புகுந்த வீட்டில் புதுப்பொலிவுடன் வாழ்கின்றாள்.  இதை டொரண்டோ தமிழ்ச் சங்கத்தில் நேரிடையாகப் பார்த்தேன்.

  அங்கே சென்று உரையாற்றி அமர்ந்ததும் ஏதோ பிறவிப் பயனை அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தமிழ் இலக்கணத்தையும், இலக்கியத்தையும், நிகண்டுகளையும் கரைத்துக் குடித்த அறிஞரிடையே பேசுவது என்பது அரிய வாய்ப்பல்லவா?

 கனடாவின் தலைநகர் ஒட்டாவா. இங்கிருந்து புறப்படும் அதிவேக அதிநவீன சொகுசுப் பேருந்தில் பயணித்தேன். 550 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டொரண்டோ நகருக்கு அப் பேருந்து எடுத்துக்கொண்ட பயண நேரம் வெறும் நான்கு மணி பதினைந்து நிமிட நேரம்தான்! நடுவிலே ஓரிடத்தில் பயணியர் வசதிக்காக நின்றும் சென்றது. கட்டணம் எவ்வளவு என்றுதானே கேட்கிறீர்கள்? இந்திய மதிப்பில் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மட்டுமே!

  டொரண்டோவில் இறங்கிய சற்று நேரத்தில் பத்திரிகையாளர், எழுத்தாளர், விழா ஏற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட நண்பர் அகில் அவர்கள் முன்னரே அறிமுகம் ஆனவரைப் போல நேரே என்னிடத்தில் வந்து கைகுலுக்கி வரவேற்று அருகில் இருந்த நம்மூர் நீல்கிரீஸ் கிளைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழையும்போதே கோயமுத்தூர் சாம்பார் வாசம் வாசல்வரை வந்து வரவேற்றது. முதல் முறையாக மூக்கைப் பிடிக்க உண்டு மகிழ்ந்தேன்.

    அங்கிருந்து தமிழ்ச் சங்க வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். நூறு பேர் அமரத்தக்க அளவான அழகான அரங்கம் அது. அங்கே ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆய்வரங்கம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

  முன்னதாகச் சென்றது பெரும் வாய்ப்பாக அமைந்தது. ஆய்வரங்கை நெறிப்படுத்தி நடத்தும் முதுபெரும் அறிஞர் கலாநிதி பேராசிரியர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களுடன் சில மணிநேரம் தமிழ் இலக்கியத் திறனாய்வின் பரிமாணங்கள்  குறித்தும் தொடர்புடைய தமிழறிஞர்கள் குறித்தும்  அளவளாவும் பேறு பெற்றேன். அவர் எனக்கு ஒரு நடமாடும் கலைக்களஞ்சியமாகத் தெரிந்தார். டாக்டர் மு.வ. அவர்களைச் சந்தித்துப் பேசமுடியாமல் போன குறை நீங்கியது.

     ஆய்வரங்கம் குறிப்பிட்ட  நேரத்தில் தொடங்கியது. முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வுக் களத்தைத் தொட்டுக்காட்டி, என்னை அறிமுகம் செய்து உரையாற்ற அழைத்தார். தீபம் நா.பார்த்தசாரதியின் சமூக நாவல்களில் குடும்பச் சிக்கல்கள் என்னும் தலைப்பில் எழுபது நிமிடங்கள் பேசினேன். என்னைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் எழுத்தாளர் தேவகாந்தன், கவிஞர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் நா.பா. அவர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து மிக நன்றாகப் பேசினார்கள்.

 தொடர்ந்து ஐயம் தெளிதல் நிகழ்வில் கரூர் வாங்கல் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் பசுபதி அவர்கள் தனக்கு நா.பா. அவர்கள் எழுதிய கடிதங்களைக் காட்டியதோடு, நல்ல தமிழில் நா.பா.அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டினார். வேறு சிலரும் வினாக் கணைகளைத் தொடுத்து விளக்கம் பெற்றனர்.
கலாநிதி முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள்(இடது)
பட உதவி: அகில்

பேராசிரியர் முனைவர்  பசுபதி அவர்கள்
    
பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்
(பட உதவி: அகில்)
நிறைவாக, ஒரு நூலை அவையில் அறிமுகம் செய்யும் பாங்கினைக் குறித்துப் பேராசிரியர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் நுட்ப உரையாற்றினார். ஆய்வரங்கம் முடிவுக்கு வந்தபோது இரவு ஏழு மணி.  இலக்கியத் தேனை மாந்தி மகிழ்ந்த மன நிறைவுடன் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.

  முன்னரே செய்த ஏற்பாட்டின்படி என்னை மருத்துவர் லம்போதரன் அவர்கள் தன் வளமனைக்கு விருந்தாளியாக அழைத்துச் சென்றார். இவர்தான் டொரண்டோ தமிழ்ச் சங்கத்தின் பெரும் புரவலர். இவருடைய மருத்துவமனைக் கட்டடத்தில்தான் சங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவர் மருத்துவராக இருப்பினும் தமிழ் மீதுள்ள மாறாக் காதலால் இலக்கண இலக்கியங்களை திறம்படக் கற்றுச் சிறந்த முறையில் பேசவும் எழுதவும் செய்கிறார். இவர் என் அறிவுக்கு விருந்தளிக்க, அம்மையார் வயிற்றுக்கு விருந்தளிக்க நான் திக்குமுக்காடிப் போனேன். அந்த இனிய மருத்துவ இணையரின் குழந்தைகள் வாசுதேவனும்,  பவானியும் அழகு தமிழில் அன்பாகவும் பண்பாகவும் பேசியது இன்னொரு விருந்தே யாகும். பவானி தன் இனிய குரலில் திருக்குறளையும் சிவபுராணத்தையும் ஆற்றொழுக்காய் சொல்லியது இன்னும் என் செவிகளில் இன்னும் ஒலிக்கிறது!

   மருத்துவர் இல்லத்தில் பத்தாயிரம் அரிய  நூல்களைக் கொண்ட பெரிய நூலகம் உள்ளது. அங்கே மட்டுமன்றி எங்கு பார்த்தாலும் நூல்கள் காணப்பட்டன. எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஏன் குளியலறைக்குச் செல்லும் தடத்தில் கூட நூல்கள் இருந்தன!

   இரவு உணவுக்குப் பிறகு அம்மையார் சிறிது பினாட்டு என்னும் இலங்கைக்கே உரித்தான இனிப்பைக் கொடுத்தார். அவ்வளவு சுவையாக இருந்தது. வாயில் போட்டதும் உமிழ்நீர் அருவியாய்ப் பெருகியது. பனம்பழத்தின் சாற்றிலிருந்து  செய்யப்பட்டதாம் அவ்வினிப்பு! எனக்கு மட்டுமா கொடுத்தார் ஒரு பையிலிட்டு என் மனைவி மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கொடுத்தார்!

   குளிர்மழையைப் பொருட்படுத்தாமல் மறுநாள் அதிகாலையில் எழுந்து மருத்துவர் அவர்களும், அகில் அவர்களும் பேருந்து நிலையம் வரை வந்து என்னை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

  என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் என்னைப்பற்றி அகில் அவர்களிடம் சொன்னது, அகில் அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டது, பிறகு ஆய்வரங்க வாய்ப்பு உறுதியானது என அனைத்தையும் மனம் மீண்டும் அசை போட்டது. இப்படி எண்ணங்கள் சிறகடிக்க,  கொட்டும் மழையிலேயே ஒட்டாவா வந்தடைந்தேன்.

    இது குறித்து என் மனைவியிடமும் மகளிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கிறேன். அவர்களும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது அம்மாவும் மகளும் கூடிக் கூடி மெல்லிய குரலில்  பேசுகிறார்கள்.

    “கடாரம் கொண்டான் கங்கை கொண்டான் மாதிரி அப்பாவுக்கு டொரன்டோ கொண்டான் என்று ஒரு  பட்டம் கொடுக்கலாம்” எனப் பேசிக்கொண்டது அரசல் புரசலாகக் காதில் விழுந்தது!.
.................................................

முனைவர் அ. கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

10 comments:

  1. தலைப்பே மிகவும் அருமையாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளைப் பற்றி வாசிக்கும்போது மனம் பெருமை கொள்கிறது. நன்றி.

    ReplyDelete
  2. மிகுந்த மகிழ்ச்சி ஐயா!
    "டொராண்டோ கொண்டான் "
    என்ற பட்டத்தை நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  3. மிகச் சிறந்த பட்டம்... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  4. அய்யா,
    வணக்கம், ஒரு பெண்ணிற்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டில் எது சிறந்தது என்று வினா எழுப்பினால் பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டின் பெருமையைத் தான் பேசுவர். ஆனால், புகுந்த வீட்டில் தான் வாழ்வார்கள். அதைப்போல உலகநாடுகளில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட சிலநாடுகள் தமிழை ஆவணப்படுத்தித் தமிழின் பெருமைகளைப் பறை சாற்றுகின்றன. கலாநிதி முனைவர் நா.சுப்பிரமணியன்,பேராசிரியர் முனைவர் பசுபதி ஆகியோர் உட்பட சிலர் தமிழ் இருக்கையை அமைக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என 28.10.2017, தி இந்து நாளிதழில் செய்தி இடம்பெற்றிருந்தது.
    அந்நாளிதழில் இடம்பெற்ற செய்தியைச் சுட்டுகிறேன். தமிழ் இருக்கையை ஏற்படுத்த தமிழக அரசு 10 கோடி நிதியை ஒதுக்கியது. கனடா வாழ் தமிழர்களில் இருவர் ரூபாய் 6 கோடியை வழங்கியுள்ளனர். இதிலிருந்து தமிழ் மொழியானது பிறந்த மண்ணைக்காட்டிலும் புகுந்த மண்ணில் வளமாக உள்ளது என அறியமுடிகிறது. தமிழ் மொழி எந்த நாட்டில் பேச்சு மொழியாக எழுத்து மொழியாக இருப்பினும் அது பிறந்த நாட்டின் வெளிப்பாடே ஆகும். அது போல தங்களது உரைவீச்சும் அப்படிப்பட்டது தான். கடல் கடந்து தமிழின் பெருமையை, நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் குடும்பச்சிக்கல்கள் எனும் தலைப்பில் வழங்கிய கருத்துக்கோவை கனடா வாழ் தமிழர்களை மகிழ்வித்திருக்கும். தமிழ் மகள் பிறந்த வீட்டைக்காட்டிலும் புகுந்த வீட்டில் குலவிளக்காக மிளிர்கிறாள் என்பதில் ஐயமில்லை. அதற்கு நீங்களும் உதவியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு, முனைவர் அவர்களே! ‘ நா.பா.வின் நாவல்களில் மனச்சிக்கலுடைய மாந்தரை நீங்கள் எந்தச் சிக்கலும் இல்லாதவகையில் தெளிவாக எடுத்துரைத்தது மிகச் சிறப்பாய் இருந்தது ! வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!
    சு.பசுபதி
    https://s-pasupathy.blogspot.com/

    ReplyDelete
  6. As we repeatedly write in this comment column,very few have the great opportunities to enjoy whenever they go.You are one among them.Best Wishes Mr.Govindarajan

    ReplyDelete
  7. படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா

    டொராண்டோ கொண்டான்
    வாழ்க வாழ்க

    ReplyDelete
  8. உங்களுக்கு வீட்டில் கிடைத்த பட்டம் மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதும் கூட! மிக மிக மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஐயா!தமிழ்நாட்டுத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தமிழுக்குச் செய்யும் சேவையும் தங்கள் குழந்தைகளைத் தமிழில் பேசச் செய்வதும் கற்றுக் கொடுப்பதும் அளப்பரியது என்றே தோன்றுகிறது ஐயா.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. What to say? Every one of your articles is decorated with costly stones. Very interesting to read and informative too. I wonder at the way you present your experience. I pray to the Almighty to bless you with long life and good health to give us such sweeties. Prof.Pandiaraj

    ReplyDelete